Sunday, 31 August 2014

இரும்பு மனிதர் காமராஜர் Kamaraj the Iron man (பகுதி-2.)

இரும்பு மனிதர் காமராஜர்.
                  ~~~~~~~~~~~~~~~~~~~
(பகுதி-2.)

(தலைவர்களிடையே ஒரு தொண்டனாய், தொண்டர்களிடையே நல்வழி காட்டும் ஒரு தலைவனாய் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி இன்றய தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக எனது முயற்சி.)

    அக்காலத்தில், ஒரு ரூபாய் என்பது பதினாறுஅணா’க்
-களைக் கொண்டதாக இருந்துவந்தது. `2 அணா' `4 அணா', `8 அணா' மற்றும் கால் அணா, அரை அணா' என்கின்ற  சில்லரை நாணயங்கள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்து வந்தன.

கல்வியறிவு
~~~~~~~~~
     காமராஜர் அவர்கள் பிறந்த சாத்தூர் தாலுக்காவும் அத்தாலுக்கா இருந்த திருநெல்வேலி மாவட்டமும் பொருளாதார நிலையில் இவ்வாறு இருந்தாலும் கல்வி அறிவில் சாத்தூர் தாலுக்காவானது, அக்காலகட்டத்தைப் பொருத்தவரையில், சிறிது முன்னிலையிலேயே இருந்தது எனலாம்.

    
சாத்தூர் தாலுக்காவில், கல்வி கற்றோர் என்று வகைப் படுத்திப் பார்த்தால்  அத்தாலுக்காவின் மக்கள் தொகையின் ஒவ்வொரு ஆயிரம்பேரில் ஆண்கள் இருநூற்றி மூன்றுபேர், பெண்கள் ஒன்பதுபேர் என்ற விகிதத்தில் கல்வி கற்றவர்களாக இருந்தனர்.
கோயில் மணியும், பூக்கள் சொன்ன செய்தியும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     பார்வதியம்மாள், ஒரு தேங்காய், வெற்றிலை, வாழைப்பழங்கள், மலர்கள் மற்றும் முற்றிலும் இரத்தசிவப்பு நிற மலர்களால் தொடுக்கப்பட்ட ஒரு மாலை ஆகியவற்றை அழகாக வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு தட்டினை தனது கைகளில் ஏந்தியவாறு நின்றிருந்தார். அத்தட்டினைக் கோவில் பூசாரி முத்துப்பண்டாரம் வயது மூப்பினால் சுருங்கிய தோல்களுடன் காணப்பட்ட   பார்வதியம்மாளின் கைகளிலிருந்து மிகுந்த மரியாதையுடன் பெற்றுக்கொண்டார்.

    
அம்மனின் சன்னதியில் பார்வதியம்மாள் கொண்டு வந்த பிரசாத தட்டினை வைத்து அம்மனுக்குப் பூசை செய்தபின்னர்
கோவில் பூசாரி பார்வதியம்மாளுக்கு திருநீற்றையும் குங்குமத்தையும் வழங்கினார்.

    
பார்வதிய
ம்மாள் தன் கைகளைக் கூப்பி பணிவோடு அம்மனைக் குனிந்து வணங்கினார். பார்வதியம்மாளின்  மனதில் உள்ள ஏக்கங்களும் பிரார்த்தனையும் என்னவென்று பூசாரிக்குத் தெரியும்; பலமுறை அம்மன் முன் நின்று அருள்வேண்டி பிரார்த்தனை செய்தபோதல்லாம் அவற்றைக் காதில் வாங்கியுள்ள காரணத்தால் பூசாரி முத்துப்பண்டாரத்திற்கு பார்வதியின் பிரார்த்தனைகள் மட்டுமல்ல அவரது மூத்த சகோதரர் சுலோச்சன நாடாரது பிரார்த்தனையும் என்னவென்று தெரியும்.

 
   அந்த ஊரில் உள்ள ஆண்களும் பெண்களும்
அம்மன் முன் மண்டியிட்டு அவளது அருளையும் ஆசீர்வாதத்தையும் கேட்பது என்பது வழக்கமாகவே இருந்து வருகிறது.

  
ஆங்கில மார்ச் - ஏப்ரல் மாதங்களின் பாதியில் வருவதான தமிழ் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் தீச்சட்டி (பங்குனிப் பொங்கல்) திருவிழாவின் போது பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து   தீச்சட்டிகளைத் தங்கள் தலைமேல் சுமந்து கொண்டோ அல்லது தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டோ ஊர்வலமாக நகரம் முழுவதும் செல்வது வழக்கம்.

       
தங்களின் பிரார்த்தனையின் பலனாகக் குழந்தை வரம் பெற்றவர்கள் தங்களின் கழுத்தில் ஒரு தொட்டிலைக்கட்டி அதில் தங்கள் குழந்தைகளை வைத்துத்  தீச்சட்டியை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்வர். சிலர் தங்கள் குழந்தைகளைப்போல மரத்தினாலோ அல்லது வெள்ளியினாலோ செய்த பிரதிமைகளை (
உருவச் சிலைகளை) அம்மனுக்குக் காணிக்கையாக வழங்குவதும் உண்டு.

   
அந்தக்
 கோவிலிலிருந்து பார்வதியம்மாள் தன் வீடு நோக்கி நடக்கலானார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் மற்றொரு கோயில் இருக்கிறது, அது அவர்களின்  குல தெய்வமான  தேவி காமாட்சி அம்மனின் கோயிலாகும். இந்த குலதெய்வத்தின் பெயரிலிருந்துதான் பெருந்தலைவர் அவர்கள் ‘காமாட்சி -காமராஜ்’ எனும் பெயரை பெற்றார்.

       
காமாட்சி அம்மனின் கோயிலுக்கு அருகில் பார்வதியம்மாள் வந்தவுடன் " இதுவரை என் பிரார்த்தனை அம்மாவின் காதில் விழுந்தபாடில்லை. அவளிடமிருந்து என் பிரார்த்தனைகளுக்கான பதில் கிடைக்கக் அடுத்த வெள்ளிக்கிழமை வரை நான் காத்திருப்பேன். அந்த நாளில் எனக்கு நல்லபதிலாக ஒரு பூவை அவள் எடுத்துத்தரும்படி நான் வேண்டுவேன்’ என்று  தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
(தொடரும்)

குறளும் பெருந்தலைவரும் -
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருந்தலைவரது வாழ்வை அறியும்போது பொருத்தமாக நமக்கு விளங்கக்கூடிய திருக்குறள் :
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
-குறள்.
பொருள்-
        அம்பு நேராகத் தோன்றினும் கொடியது ;  யாழ் வளைந்ததாய் இருந்தாலும் செயலால் செம்மையானது. அதனால், மனிதரை தோற்றத்தால் அன்றிச் செயலால் எடை போடுக.
                                                                                          ****

Tuesday, 15 July 2014

இரும்பு மனிதர் காமராஜர்.Kamaraj the Iron man (பகுதி-1)


(தலைவர்களிடையே ஒரு தொண்டனாய், தொண்டர்களிடையே நல்வழி காட்டும் ஒரு தலைவனாய் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி இன்றய தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக எனது முயற்சி.)

இரும்பு மனிதர் காமராஜர்.
                 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(பகுதி-1.)

    ஒருதலைவர் குறித்து அறியும் முன்னர் அவர் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தை அறிந்து கொண்டால் அவரது வளர்ச்சியின் பரிணாமத்தை அறிவது இலகுவாகும். அவ்வகையில் காமராஜர் அவர்கள் தோன்றிய காலம் எப்படிப்பட்டதாக இருந்தது  என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

அக்காலச் சூழல்கள்-
~~~~~~~~~~~~~~~~~~~~~
1.பிறந்த ஊர்
~~~~~~~~~~~~~
  இந்திய தீபகற்பத்தின் கடைக்கோடியில் அமைந்திருந்த, அக்காலத்தில் சிறிய  நகரமாக இருந்த, ‘விருதுப்பட்டி’ எனும் ஊரே பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த ஊராகும். அந்த விருதுப்பட்டியே இக்காலத்தில் ‘விருதுநகர்’ என்றழைக்கப்படுவதாகும்.

 
இக்காலத்தில் அந்நகரம், மாவட்டத் தலைநகராகவும், தனி வட்டமாக(தாலுக்காவாக)வும் விளங்கினாலும்
விருதுப்பட்டி  அந்நாளில் சாத்தூர் தாலுக்காவினுள் அமைந்த ஒன்றாய் இருந்தது.

2.மக்கள்தொகை
~~~~~~~~~~~~~~~~~
     விருதுப்பட்டியில் காமராஜர் அவர்கள் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னான மக்கள்தொகை 16,837 (1891ல் -14,075) மட்டுமே.

3.மருத்துவ வசதி
~~~~~~~~~~~~~~~~~~
  சராசரியாக இரண்டிலிருந்து ஐம்பத்தோருபேர் உள்நோயாளிகளாகவும்  சுமார் நூற்றிப்பதினைந்து பேர் புறநோயாளிகளாகவும் வரக்கூடிய அங்கிருந்த அரசு மருத்துவமனையானது ஆண்களுக்கென ஐந்து படுக்கைகளும்  பெண்களுக்கென ஐந்து படுக்கைகளையும் கொண்டதாக இருந்தது.

4.பொருளாதாரப் பிண்ணணி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    கி.பி.1912 மற்றும் 1913களில் காமராஜர் அவர்கள் பிறந்த நகரான விருதுப்பட்டி மட்டுல்லாது அதன் தாலுக்காவிலும் சேர்த்து வருடாந்திர வருமானம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை பெறும் நபர்களின் எண்ணிக்கை 126 மட்டுமே. வருடாந்திர வருமானம் ரூ.2000 வரை பெறும் நபர்களின் எண்ணிக்கை 105. ரூ.2000க்கு மேல் வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 137.
    ஆக, அக்காலத்தில் வருமான வரி செலுத்துவோராய் 368 பேர் மட்டுமே இருந்த பகுதியாகும் சாத்தூர் வட்டம். தலைக்கு ரூ0- 1அணா - 8பைசா விகிதமாக வருமான வரி இருந்தது.

(தொடரும்)

குறளும்
பெருந்தலைவரும் -
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருந்தலைவரது வாழ்வை அறியும்போது பொருத்தமாக நமக்கு விளங்கக்கூடிய திருக்குறள் :

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
-குறள்.
பொருள்-

     உயர் குணத்தை உடையவரா  சிறுமைக்  குணத்தை உடையவரா என  உரசிக் கண்டறிவதற்கு உரைக் கல்லாக இருப்பவை அவரவர் செய்யும் செயல்களே.

                                                                                                      
                               ****