கூவத்தூர் நட்சத்திர விடுதி நிகழ்ச்சிகளும் புதுவை காலாப்பட்டு
நட்சத்திர விடுதி நிகழ்ச்சியும் ஒரே மாதிரியானவை அல்ல!
நேற்று, 18-2-17 காலையில் ஒலிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் எம்எல்ஏக்களை குறித்து பேசும்போது திரு.தீரன் ‘சிறிய மாநிலமான புதுச்சேரியில் காங்ரஸ் கட்சி முதலமைச்சரை தேர்வு செய்யும் வரையில் எப்படி தனது எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதியில் வைத்திருந்ததோ அப்படித்தான் அதிமுகவும் வைத்திருப்பதாக’ குறிப்பிட்டார்.
திரு.தீரனின் நிலை அரைகுறையாக செய்திகளை உள்வாங்குபவர்களின் நிலையைப் போலவே இருக்கின்றது.
புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள அஷோக் நட்சத்திர விடுதியானது சட்டமன்ற கட்சி தலைவரைத் தேர்வு செய்வதற்கான, நேரடியாக அவரவர் இடத்திலிருந்து விடுதிக்கு வந்து கலந்து கொள்ளும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடக்கும் இடமாகத்தான் இருந்தது.
அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்துதான் கலந்து கொண்டார்களே தவிர முன்னதாகவே அங்கு எவரும் தங்கியிருக்கவோ அடைத்து வைக்கப்படவோ இல்லவேயில்லை.
மேலும், அந்நிகழ்வின்போது கூட்டம் நடந்த குறிப்பிட்ட அறை தவிர்த்து விடுதியின் ஏனைய பகுதிகளில் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்பம்போல் போய்வர முடிந்தது.
இவை எவற்றையும் அறியாத ஒரு மூடன் பேசினால் அவனது பேச்சு எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கின்றது திரு. தீரனின் பேச்சு.
மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த அஷோக் நட்சத்திர விடுதி எந்தவொரு புதுச்சேரி அரசியல் தலைவரின் சாதிக்காரருக்கு சொந்தமானதோ அல்லது வேண்டப்பட்ட தனிநபருக்கு சொந்தமானதோ அல்ல.
அது மத்திய மாநில அரசுகள் கூட்டாக நடத்தும் ஒரு அரசு நிறுவனமாகும் என்பதை திரு. தீரன் போன்றோர் தெரிந்துகொள்வது நலம்பயக்கும்.
மேலும், மாண்புமிகு வெ.நாராயணசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்ட உடனேயே, அதே கூட்டத்திலேயே, எவரும் எதிர்பாராத விதமாக, தனது தொகுதியை விட்டுத்தர முன்வருவதாக திரு.ஜான்குமார் அவர்கள் தானாகவே முன்வந்து மத்திய பார்வையாளர்களிடம் சொன்னார்கள் என்பதை அங்கிருந்தோர் அனைவரும் அறிவார்கள் என்பதையும் தெரிந்து கொள்க!
மற்றுமொரு செய்தி- புதுவை முதலமைச்சராக ரங்கசாமி நீடிப்பது குறித்து முடிவெடுக்க 2008 ஆகஸ்டில் கூட்டப்பட்ட கூட்டமும் அரசுக்கு சொந்தமான இதே விடுதியில்தான் நடந்தது!